Do not mix up truth with falsehood and knowingly hide the truth. Holy Qu’ran(2:42)

Sunday, January 16, 2011

12 அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள்

“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்) நூற்கள்: புஹாரி, முஸ்லிம்

அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.

சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.

“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

பிற மதத்தைச் சேர்ந்த மக்கள் அவர்களுடைய இறைவேதம் என்று கூறிக்கொள்ளும் நூல்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை. அவையெல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டவை; இந்த காலத்திற்கு ஒத்து வராது என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களின் வேத நூல்களில் கூறப்பட்ட பல விஷயங்கள் தற்கால நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு முரணாக இருப்பதை உணர்ந்தாலும், அவற்றைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை. அது போன்றே அவர்கள், திருக்குர்ஆனையும் நினைக்கின்றனர். இதுவரை நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் (Proven Scientific Facts) எவையும் அல்குர்ஆனிற்கு முரணாக இல்லை என ஒவ்வொரு முஸ்லிமும் மார்தட்டிக் கொள்ள முடியும். அதே நேரம், இதனை விளங்காத மக்களுக்கு இவற்றை எடுத்து விளக்க வேண்டிய கடமை முஸ்லிம்கள் மேல் உள்ளது.

எண்ணற்ற அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனில் பொதிந்து கிடைக்கின்றன. இயற்பியல், வேதியியல், உயிரியல், கருவியல், வானியல் என திருக்குர்ஆன் தொடாத அறிவியல் பகுதிகளே இல்லை என கூறும் அளவிற்கு கட்டுக் கதைகளாக இல்லாமல், அறிவியல் உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றுள் சில:

ஆழ் கடலில் அலை

இரு கடல்களுக்கிடையே தடுப்பு

நிலத்தடி நீர் சேமிக்கப்படும் முறை

திருப்பித் தரும் வானம்

பெருவெடிப்புக் கொள்கை

முகடாக வானம்

வானங்களுக்கும் பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி

விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்

சூரியனும் கோள்களும் நகர்ந்து நீந்துதல்

வானத்திலும் பயணம் செய்ய வழிகள்

முளைகளாக மலைகள்

பூமியில் மலையின் உயரம் அளவிற்குக் கீழே செல்ல இயலாத நிலை

பூமி உருண்டை

பூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம்

ஓரங்களில் குறைந்து வரும் பூமி

மனிதர்களின் எடைக்கேற்ப பூமியின் எடை குறைதல்

புவி ஈர்ப்பு சக்தி

விரல் ரேகை தான் மனிதனின் முக்கிய அடையாளம்

கலப்பு விந்து

கர்ப்ப அறையின் தனித்தன்மை

வேதனையை உணரும் நரம்புகள்

தேன் உற்பத்தி

இவையனைத்தையும் விளக்க முற்பட்டால், அதுவே தனி புத்தகமாக ஆகிவிடுமாதலால், விரிவஞ்சி முஸ்லிம்களிடையே அதிகம் அறிமுகம் இல்லாத, அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள ஓரிரு அறிவியல் உண்மைகளை காண்போம்.

தராசை நிலை நிறுத்திய அல்லாஹ்:

அவன் (அல்லாஹ்) வானத்தை உயர்த்தினான்; நிறுப்பதில் வரம்பு மீறாதீர்கள்! என்று தராசையும் நிறுவினான். நியாயமாக எடையை நிலை நாட்டுங்கள்! எடையில் குறைத்து விடாதீர்கள்! (அல்குர்ஆன் 55:7-9)




மேற்கண்ட வசனம் இருபெரும் அறிவியல் உண்மைகளை நமக்கு எடுத்தியம்புகின்றது. முதலாவதாக, “அல்லாஹ் வானத்தை உயர்த்தினான்” என்ற வசனம் 20 ஆம் நூற்றாண்டின் அரும்பெரும் கோட்பாடான “பெரு வெடிப்புக் கொள்கை”-யை கூறுகின்றது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பதாக இந்த பேரண்டம் சிறு கேலக்ஸிகளாக மிக நெருக்கத்துடன், நட்சத்திரங்கள் பூமியோடு நெருங்கிய நிலையிலேயே இருந்தது. பேரண்டத்தின் விரிவாக்க சக்தியின் மூலமாகவே வானமும், வானத்தில் உள்ள பொருட்களும் பிரிந்து, உயர்ந்து சென்றுள்ளன. 1400 ஆண்டுகளுக்கு முன்பதாக எழுதப் படிக்கத் தெரியாத நபியான முஹம்மது (சல்) அவர்களால், கண்டிப்பாக இச்செய்தியை கூறியிருக்க முடியாது; மாறாக, இதனையெல்லாம் படைத்து, இயக்கும் ஏக இறைவனால் மட்டுமே இதனைக் கூறியிருக்க முடியும் என்பது தெளிவு.

அடுத்ததாக, நிறுப்பதில் நாம் நீதி தவறக்கூடாது என்பதற்காக, வானத்தை உயர்த்தி, தராசை நிறுவியதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த வசனத்தை புரிந்து கொள்வதற்கு முன்னதாக, பொருண்மை (Mass), எடை (Weight) இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பொருளின் பொருண்மை என்பது அது தன்னகத்தே கொண்டுள்ள பருப்பொருளின் அளவைப் பொருத்தது; எடை என்பது அப்பொருளின் மீது செயல்படும் (புவி) ஈர்ப்பு சக்தியின் அளவாகும். எடுத்துக்காட்டாக, 25 கன சென்டி மீட்டர் கொள்ளளவுள்ள ஒரு ரப்பராலான பொருளையும், அதே கொள்ளளவுள்ள ஒரு இரும்புக்கட்டியையும் தராசின் இரு தட்டுகளில் வைத்தால், இரும்புக்கட்டி வைக்கப்பட்ட தட்டு கீழிறங்கி இருக்கும். ஒரே அளவான பொருட்களாக இருப்பினும், இரும்பின் பொருண்மை, ரப்பரின் பொருண்மையை விட அதிகம் என்பதே இதற்குக் காரணம். ஆனால், இதே தராசை பூமியை விட்டு மேலே 2000 கி.மீ. உயரத்திற்குச் சென்று விண்வெளியில் பிடித்தோமானால், இரு தட்டுகளும் சமமாகவே இருக்கும். பூமியில் வேலை செய்த தராசு விண்வெளியில் வேலை செய்யவில்லையே ஏன்? ஏனெனில், நாம் தராசில் நீதி தவறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கண்ணுக்குப் புலனாகாத ஈர்ப்பு சக்தியை அல்லாஹ் ஏற்படுத்தி, அந்த புவியீர்ப்பு விசை மூலம் பொருட்களின் சரியான எடையை நாம் அறிந்து கொள்ளச் செய்திருக்கிறான் என்பது இதிலிருந்து விளங்குகின்றது.

வானத்தை கூரையாக்கிய அல்லாஹ்:

வானத்தைப் பாதுகாக்கப்பட்ட கூரையாக்கினோம்; அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்! (அல்குர்ஆன் 21:32)

பூமியின் ஒரு நாள் கணக்குப்படி, தினமும் சுமார் 800 கோடி விண்கற்கள் விண்வெளியிலிருந்து பூமியைத் தாக்குகின்றன என அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். சூரியக்குடும்பத்தில் நாம் வாழும் பூமியானது மூன்றாவது கோளாகும். இதற்கடுத்து செவ்வாய், வியாழன் என்ற கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவைகளுக்கிடையே, ஆயிரக்கணக்கான சிறு கோள்களும், கோடிக்கணக்கான சிறு விண்கற்களும் சூரியனை அகல வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே இருந்த கோள் வெடித்து சிதறியதனால் தோன்றியவையே இந்த சிறு கோள்களும், விண்கற்களும், வால் நட்சத்திரங்களும் ஆகும். பெரும்பாலான விண்கற்களின் அளவு, நாம் ஹஜ்ஜின் போது சைத்தானுக்கு எறியும் கற்களைவிட சிறிதான கூழாங்கல் அளவிலிருந்து சிறு மண்துகள் அளவு தான். ஆனால், இவற்றின் வேகமோ, விநாடிக்கு ஏறக்குறைய 42 கி.மீ. பூமியானது சூரியனை விநாடிக்கு சற்றேறக்குறைய 30 கீ.மீ வேகத்தில் சுற்றுகின்றது. இந்த விண்கற்கள் சூரியனைச் சுற்றும்போது, சற்றே பாதை விலகினால், புவியின் ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்பட்டு பூமியின் மீது மோதுகின்றன.





இவ்வாறாக எதிரெதிர் திசையில், விண்கல் பூமியின் மீது மோதினால் என்ன நிகழும்? விநாடிக்கு 64 கி.மீ. வேகத்தை, சிறு மண்துகள் போன்ற விண்கல் பெற்று விட்டால், ஒரு அங்குலம் தடிமனுள்ள இரும்புத்தகட்டையே துளைத்துச் சென்று விடும் சக்தியை பெற்று விடுவதாக கணக்கிட்டுள்ளனர். இருப்பினும், பூமியைச் சுற்றி, காற்று மண்டலப் போர்வையை அல்லாஹ் ஏற்படுத்தி, நம்மைக் காத்து அருள் புரிந்துள்ளான். கடுமையான வேகத்தில், பூமியின் காற்று மண்டலத்திற்குள் நுழையும் இந்த விண்கற்கள், காற்றில் உராய்ந்து, அதன் காரணமாக சூடாக்கப்பட்டு, உருகி எரிந்து சாம்பலாகி காற்று மண்டலத்தோடு கலந்து விடுகின்றன. இவ்வாறாக இறைவன் காற்றுப் போர்வை மூலம் நம்மையும், நாம் வாழும் பூமியையும் காத்தருளி உள்ளான்.


இறைவன் வழங்கிய அற்புதமான திருக்குர்ஆனின் அறிவியல் உண்மைகளை கண்டுணர்ந்து, சிந்திக்கக்கூடிய முஸ்லிமல்லாத மக்களுக்கு எத்தி வைப்பதன் மூலம், சத்திய இஸ்லாத்தினை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, இஸ்லாத்தின் பால் ஈர்க்க முடியும், இன்ஷா அல்லாஹ்.

11 வட்டி ஒரு பெரும் பாவம்

முன்னுரை:

சமீபத்தில் எத்தனையோ நாடுகள் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. அவற்றுக்கு மூலகாரணம் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையேயாகும். உலகின் மிகப்பிரபல்யமான சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் சின்னஞ்சிறிய அதிர்வுகளைக்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் முழுவதும் முடங்கிப்போயின, இதற்கு காரணம் வட்டி அடிப்படையிலான வர்த்தகமேயாகும். பல குடும்பங்கள் அழிந்து போனதற்கும் வட்டியே முதற்க் காரணமாகும். இஸ்லாம் வட்டியை முற்றாக தடை செய்கிறது. அவற்றை தெரிந்து கொண்டு நமது வாழ்வில் கடைபிடிப்பது அவசியமாகும்.

வட்டி என்றால் என்ன?:
அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது. '...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279) இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான்.
'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130)

வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு:
வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது. 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275) வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. 1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது. 2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும். 3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும்.


வட்டி ஒரு பெரும் பாவம் :

'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)


வட்டி ஒரு கொடிய குற்றம் :
'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ) மற்றொரு அறிவிப்பில், 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன்

அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் :
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)



வட்டி வாங்கியோருக்கு தண்டனை:

1. நிரந்தர நரகம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085) நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள்.. 1.கொலையாளி, 2..காபிர்கள் 3.வட்டி உண்பவர். ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான்.


போர்ப் பிரகடணம்:

வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள்.


வட்டி வாங்குவோரின் அவல நிலை :
1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275) 2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962) 3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279


அடமானம்:

அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார். இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன. முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும். நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும். 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)



ஒத்தி வட்டியா?:

ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.. 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)


பேங்க்கில் பணம் போடலாமா? :

வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது. இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது. இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும்.


ஏலச்சீட்டு வட்டியாகுமா?:

ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும்.

குலுக்கல் சீட்டு:
குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும்.. அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது. அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே.


தவணை முறையில் பொருள் வாங்குவது:
இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று. இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது.


வங்கியில் வேலை செய்வது:

'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)



பகடி கூடுமா?:

பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது.

முடிவுரை:
பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக